Type Here to Get Search Results !

கார்த்திகை விரதம்

கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால்,  “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.  ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஷண்முகநாதன்
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,
“நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
என்கிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.
விரத முறைகள்
தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம். அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி இல்
லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்
என்கிறது அருணாசல புராணம் (பாடல் – 159)
கார்த்திகை விரதத்தின் பலன்

முறையாக ஒருவன் விரதம் மேற் கொள்ளும் போது அது வரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.