திருவூஞ்சல்


ஓம் சிவசுப்பிரமணிய சுவாமி துணை
காப்பு
பூந்திரைகள் சூழ்ந்துதமிழ் பாடி ஆடும்
பூம்பதியாம் மண்டைதீவு பொலிந்து தோன்றும்
காந்தமிகு வயல்முகப்பில் எழுந்த ருளும்
கருணையருள் பொழிந்திடும் கந்த னான
சாந்தமிகு சிவசுப்பிரமணிய ஸ்வாமி
சார்ந்திடும் வள்ளிகுஞ் சரியா ரோடு
பூந்தமிழின் ஊஞ்சல்மிசை வைகி ஆசப்
பூரணனாம் வாரணின் பதங்கள் காப்பாம்.
நூல்
1. சீருலவு பொற்கால்கள் வேத மாகச்
சிவாகமே நடுவயிர விட்ட மாகப்
பேருலவு கலைஞானம் வடங்க ளாகப்
பிரணவஓங் காரமதே பீட மாகப்
பாருலகில் பைந்தமிழின் ஊஞ்சல் வைகிப்
பாலித்து நல்லருளைப் பொழியும் தேவா
சேருமெழில் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

2. பயபக்தி எனும்பவளத் தூண் நிறுத்தி
பஞ்சபுலன் சேர்ந்தென்றாய் விட்ட மாக்கி
நயமான நாற்கரண வடங்கள் மாட்டி
நலமேவு திழருவருளாம் பலகை கோர்த்து
வயமான சீவாத்மா முத்தி யூஞ்சல்
வளமாக ஆடருள்செய் சுப்ரமண்யா
கயல்சூழும் மண்டைதீவு முகப்பு வயல்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

3. கோலநவ ரத்னமணிக் கிரீட மாடக்
குலவிடும் குண்டலங்கள் செவியி லாட
நீலவிழி அருளாட திலக மாட
நித்திலப்புன் னகையாட நீறு மாட
வேலதுவும் கரந்தனிலே மிளிர்ந்தே ஆட
விரிமலரின் அபயமொடு வரத மாடச்
சீலமிகு மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

4. அயிலாட அணிசேவற் கொடியு மாட
அரியாட அயனாட அரனு மாட
மயிலாட ஒயிலான மாத ராட
மார்பினிலே கவழ்கடம்ப மாலை ஆட
வயல் சூழும் கதிராடக் கயலும் ஆட
வண்டாடச் செண்டாட வளமும் ஆட
உயர்வான மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

5. தாரணிசூழ் தரங்கஅலை ஆட ஆடத்
தழலாடப் புனலாட வளியுமாடக்
காரணியாம் நிலமாட வெளியு மாடக்
கழலாடப் பிரபஞ்சம் களித்தே ஆடப்
பாரணிசெய் தாலவளம் கொழித்தே ஆடப்
பாம்பாட வேம்பாட பசுமை ஆடப்
சீரணிசேர் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

6. நால்வேதம் போற்று சிவன் நுதல் விழியில்
நளினதீப் பிழம்பாக உருவெ டுத்தே
சால்பான சரவணப் பொய்கை தன்னில்
சாணைக்கு ழந்தையாய் வனவம் வந்தாய்!
பால்முகமும் பார்வதியும் பார்த்த ணைக்கப்
பாலன் நீ ஸ்கந்தனாய் அவத ரித்தாய்!
சேல்பாயும் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

7. ஞாயிறு கோடிஒளித் தேசு ரூபா!
ஞானத்திங் கள்முகத்துச் செவ்வாய் பப்பத்
தாயவள் அன்புதன்னால் தளிர்வேல் தந்தாள்
தண்கலைச் செவ்வியா ழன்பாய் மீட்டத்
தூயவெள்ளி மயில்மதில் ஆச னித்தாய்!
துதிக்கையன் சோதரனே சுப்ரம் மண்யா!
பாயுமுரல் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

8. வேலைஎறிந் தசுரர்குலம் வேர றுத்தாய்!
விரித்தமயில் வாகனமாய்க் கொண்டாய் வேலா
சேவலதைக் கொடியாகப் பிடித்தாய் கந்தா!
செழுந்தேவ குஞ்சரியை மணமு டித்தாய்!
வாலைக்கு றத்திவள்ளி மோஹம் கொண்டாய்!
வருத்தனாய் வேலனாய் வதுவை செய்தாய்!
சோலையெழில் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

9. நாரதரும் மாங்கனியைச் சிவனுக் கீய
நற்கனியின் ஆசையினால் முருகா நீயும்
பாரதனை மயில்மீதில் வலமும் வந்தாய்!
பழம்பெற்ற கணபதியைக் கண்டு பொங்கி
ஆரமெலாம் ஆடையுடன் கழற்றி வீசி
ஆண்டியாய்ப் பழனியிலே காட்சி தந்தாய்!
சீரலைசூழ் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

10. தெரிதமிழைச் சுவைப்பவனே ஆடீர் ஊஞ்சல்
திருப்புகழுக் குருகிடுவோய் ஆடீர் ஊஞ்சல்
அருமருகா திருமருகா ஆடீர் ஊஞ்சல்
அவ்வைதமிழ் மாத்திடுவோய் ஆடீர் ஊஞ்சல்
துரியபதம் அருள்பவனே ஆடீர் ஊஞ்சல்
துதிக்கையன் சோதரனே ஆடீர் ஊஞ்சல்
சொரியுமலர் மண்டைதீவு முகப்பு வயற்
சிவசுப்ர மணியரே ஆடீர் ஊஞ்சல்.

வாழி
மாமறையோர் அந்தணரும் வாழி! வாழி!
மன்னிடும் தேவரெல்லாம் வாழி! வாழி!
பூமழையும் ஆவினமும் வாழி! வாழி!
பூவையரின் கறங்புநெறி ஞானம் வாழி!
பூமிபரி பாலனம்செய் செங்கோல் வாழி!
பூந்தமிழும் சைவநெறி சீலம் வாழி!
சேமமண்ட நகர் முகப்பு வயலும் வாழி!
சிவசுப்ர மணியரும் வாழி! வாழி!

எச்சரீக்கை
1. ஆங்காரமும் அயன்கொண்டிடத் தீர்த்தாய் எச்சரீக்கை
அரனார்சிவன் குருவாகவே வந்தாய் எச்சரீக்கை
ஓங்காரத்தின் பொருள்சொல்லிய குருவே எச்சரீக்கை
ஊர்மண்டைதீ வினிலேவளர் முருகா எச்சரீக்கை
2. சூரர்குலம் வதைத்தபெரும் தீரா எச்சரீக்கை
சுப்ரமண்ய ஸ்வாமிசிவ பாலா எச்சரீக்கை
சீரர்ந்திடும் அருளைநிதம் பொழிவோய் எச்சரீக்கை
சேவற்கொடி ஏந்தும்செல்லக் குமரா எச்சரீக்கை
3. வேல் ஏந்தியே வினைதீர்த்திடும் நாதா எச்சரீக்கை
வேண்டுவரம் அடியார்க்கருள் வேலா எச்சரீக்கை
மால் போற்றிடும் மருகாதிரு முருகா எச்சரீக்கை
மயிலாசனம் அமரும்குரு பரனே எச்சரீக்கை

பராக்கு
1. வேலனே சீலனே தேவா பராக்கு
விறல்வீரனே அதிதீரனே நாதா பராக்கு
பாலதண் டாயுத பாணியே பராக்கு
பரிந்தெமக் கருளுவாய் முருகா பராக்கு

2. கலாபவா கனமேறும் கந்தா பராக்கு
காருண்ய ரூலனே குமரா பராக்கு
குலாவுகுஞ் சரிவள்ளி நாதா பராக்கு
குருபரா முருகனே சரணம் பராக்கு

3. உருகிடும் பக்தருக்கு இரங்குவோய் பராக்கு
உத்தமத் தெய்வமே முருகா பராக்கு
திருவளர் மண்டநகர் தேவா பராக்கு
திகழ்முகப்பு வயல்சுப்ர மணியா பராக்கு

4. எமையெல்லாம் காப்பவனே எழிலோய் பராக்கு
என்றென்றும் அருள்தரும் நாதா பராக்கு
அமைதியும் சாந்தமும் தருவோய் பராக்கு
ஆறுமுக வேலவனே ஐயா பராக்கு.

லாலி
1. சிவசுப்ர மண்யருக்கு லாலி சுப லாலி
சேவற்கொடி ஏந்துவோர்க்கு லாலி சுப லாலி
பவனான சரவணர்க்கு லாலி சுப லாலி
வயல்முகப் புவாசர்க்கு லாலி சுப லாலி
தவ நிறை தொண்டரக்கு லாலி சுப லாலி
தளிர்வேலா யுதருக்கு லாலி சுப லாலி
சிவனுமை மைந்தருக்கு லாலி சுப லாலி
சிங்கார வேலனர்க்கு லாலி சுப லாலி.

2. முருக பக்தர் யாவருக்கும் லாலி சுப லாலி
முகப்புவயல் தொண்டருக்கு லாலி சுப லாலி
விரிமயிலின் வாகனர்க்கு லாலி சுப லாலி
வள்ளிகுஞ்சரி நாதர்க்கு லாலி சுப லாலி
அரிமாயன் மருகருக்கு லாலி சுப லாலி
ஆனந்த வடிவேலர்க்கு லாலி சுப லாலி
தெரிதமிழின் பிரியருக்கு லாலி சுப லாலி
தேவர் போற்றும் வேலருக்கு லாலி சுப லாலி.

மங்களம்
ராகம் : சுருட்டி தாளம் : ஆதி
கண்ணிகள்
மங்களம் ஜெய மங்களம்
1. சிவசுப்ர மண்யருக்கு
சீர் மண்ட நகருக்கும்
தவமான முகப்பு வயல்
தலத்திற்கும் மங்களம் (மங்களம்)
2. வள்ளி தேவ குஞ்சரிக்கும்
வடிவேலா யுதத்திற்கும்
துள்ளும் தோகை மயிலுக்கும்
துவசத்துச் சேவலுக்கும் மங்களம் (மங்களம்)
3. ஆனைமுகன் அரனுக்கும்
அரி அயனான வர்க்கும்
ஞான வாணி லக்குமிக்கும்
வீரதுர்க்கை அம்மனுக்கும் மங்களம் (மங்களம்)
4. பைரவப் பெருமானுக்கும்
வாராகி சுமங்கலிக்கும்
கையில் சூல மேந்தும்காளி
கண்ணனுக்கும் மங்களம் (மங்களம்)
5. கந்தன் பக்தர் யாவருக்கும்
குமரன் பூஜை செய்பவர்க்கும்
பந்தமிகு தொண்டருக்கும்
பாரில் உள்ளோர் யாவருக்கும் (மங்களம்)

மண்டைதீவு முகப்புவயல் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருவூஞ்சல் முற்றும்.
இயற்றியவர் :
'கலாரத்னா' 'கலாபூஷணம்' 'மஹாவித்வான்'
பிரம்மஸ்ரீ மா.த.ந.வீரமணிஐயர் ஆ.யு. து. P.
யாழ்ப்பாணம்