எனக்கும் இடம் உண்டு

 எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

எனக்கும் இடம் உண்டு

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்
அருள் கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

எனக்கும் இடம் உண்டு

ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

எனக்கும் இடம் உண்டு

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!

பிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்! - அந்தப்
புள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்!

வள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்! - கொடை
வள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

ஆற்றுப்படைவீடு, திருமுறுகாற்றுப்படைவீடு! - சுவை
ஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு!

சந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்!
சிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!!

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அழகென்ற சொல்லுக்கு முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

கந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்

சூரபத்மனின் வரலாறு: 
படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். 
இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். 
இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளையும் பெறவேண்டும் என்ற பேராசையினால்  சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகம்  உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு வந்தனர். 
அவன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாக்கி இந்திரன் மகன் சயந்தன் முதலான  தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தான். 
அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டார்.
ஆறுமுகன் அவதாரம்:
தேவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணை திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து  ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில்  தாமரை மலர்களின் மீது சேர்த்தான். 
அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. 
ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.
இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. 
பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது. 
முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரமாகவும் அமையப் பெற்றவன். 
வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் தோன்றல்:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அருகில் இருந்த  பார்வதி தேவி வெட்பம் தாங்கொணாது பாய்ந்து விலகி ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரபாகுதேவர் முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினார்கள். இவர்கள் பின்பு முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். 
அன்னை வழங்கிய சக்திவேல்:
அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை; தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். ஈசனும்; தன் அம்சமாகிய பதினொரு உருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
தந்தையிடம் இருந்து பாசுபதம் அஸ்திரம் பெறுதல்:
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவதச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார். 
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.  முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னரே வீரபாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீர மகேந்திர புரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது.
வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப் பெருமான் வீரபாகுதேவைரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். தூதின் போது, வீரபாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சூரனிடம் தூது உரைக்கிறான். ஆனால் அசுரனின் ஆணவத்தால் தூது முறிகிறது. சூரன் வீரவாகுதேவரை கைது செய்யுமாறு கட்டளையிடுகின்றான். அந்த கைகலப்பில் சூரனின் வீரர்களான சதமுகன், வச்சிரவாகு ஆகிய இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள். 
திருச்செந்தூரிலே ஆறுமுகக்கடவுள் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரபாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து; முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான். 
முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.  
கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி "பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்."நம் தேரைக் கொண்டுவா" என்று கட்டளையிட்டார். 
தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், " நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்" என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.
பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள். 
நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.
வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப்  எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, "மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்" என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள். 
தேவதச்சனை அழைத்து "உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து" என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு "ஏமகூடம்" என்று பெயர் வைத்தார்கள். 
எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]
கதிகாமத்தில் இருந்துதான் போர் துவங்குகிறது. பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.
சூர பதுமை தேடிச் செல்லல்:
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை, சூரனின் தம்பி தாராகாசுரன் (ஆனை முகம் கொண்டவன்) ஆண்டு வருகிறான். அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், தாரகன்; வீரபாகுதேவரையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான். 
அப்போது முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேய்தி கேட்டு துடிதுடித்தான். ஆத்திரத்தால் அவன் தம்பி சிங்கமுகாசுரன் போரிடப் புறப்பட்டான். 
சிங்கமுகனும் பல தந்திரங்களை உபயோகித்து போர் செய்யலானான். சிங்கனின் ஒவ்வொருதலை விழவும் அதற்குப் பதிலாக வேறு தலை உருவாகும் வரம் பெற்றவன். ஆயிரம் தலைகள் விழுந்தாலும் அவை அழிக்க முடியாது. அதனால் முருகனின் வேல் சிங்கனின் நெஞ்சில் பாய்ந்தது, சிங்கமுகன் இறந்தான். 
பானுகோபன் போருக்குச் செல்லல்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், சிங்கமுகனையும் அழித்து சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் அவனின் மகன் பானூகோபன் முருகனை அழிக்க தனக்கு அனுமதி தரும்படி வேண்டி போருக்குச் செல்கின்றான். மாயயால வித்தைகள் செய்து போசெய்யும் வல்லமை படைத்தவன் சூரனின் மகன் பானுகோபன். அவனும் முருகவேளின் வேலுக்கு பலியாகின்றான்
சூரன் போருக்குச் செல்லல்:
தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனதுமாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தெவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான்.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை. 
முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்றது கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நிற்க நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரபத்மனின் ஆணவத்தை அழித்தது. 
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடிமுருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்" என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. 
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.
சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம்.  சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.  
முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.
சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
ஆறிருதடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்

ஆலய வழிபாடு

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள
இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும்எனவே ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து  போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
இதன் பொருள்:-
நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது)
நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)
தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)
காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)
ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)

கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது.

"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.

அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?
சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-
அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி
நடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி
மேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி
என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.

உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?
விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.

இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன?
அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது.
  
    "சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
       கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்".
                                      என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.

அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன்  காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதா னென்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?
கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?
புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தா;ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில் களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.

அட்டபந்தனம் என்பது என்ன?
அட்டபந்தனம் என்பது ஆசனமும் மூர்த்தியும் நன்றாக ஒன்றி இணையும்படியாகச் சாத்தப்படும் ஒரு சேர்வையாகும்.
கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
போன்ற எட்டு விதமான பொருட்களாகும்.

கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன?
இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.

இறைவன் கருணை உள்ளங்கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக?
இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.

சில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே?
ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது.அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் "இலிங் கோற்பவர்". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.

இலிங்கோற்பவ மூர்த்தியை குறிப்பிடும் பொழுதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது அதாவது மானிடர்களுக்கே "நான்" என்ற அகம்பாவம் இருக்கக் கூடாதென்று கூறுகின்ற எமது சமயத்தில் தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா ?
அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறை வனைக்காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணா;த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.

தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?
அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள்.
1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள்.
2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.

இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா?
கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர்    கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை?
 சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல்
 சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம்
 செவ்வாய் --- பொங்கல்
 புதன் --- புளியோதரை
 குரு ---- தயிர்சாதம்
 சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல்
 சனி ----- எள்ளுசாதம்
 ராகு ---- உளுந்து சாதம்
 கேது ---- அன்னம்
போன்றவையாகும்.

தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை)செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா?
இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.
ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.
மூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.
நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்
இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும்
புருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்
நட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்
கும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்
கற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற  தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.
மற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவது
கண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.
குடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.
சாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.
விசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.
ஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது.
 
நாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?
எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

முதலிலே குட்டி வணங்கிய பின்னரும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தீபாராதனைக்கும் குட்டி வணங்க வேண்டுமா?
வழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.

ஆலயங்களில் திரையிடப் பட்டிருக்கும்பொழுது வழிபாடு செய்யலாமா?
இறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும், திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.

ஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்?
ஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து  வணங்கலாம்.

அப்படியாயின் பரிவார மூர்த்திகளை எவ்வாறு விழுந்து வணங்குவது?
பரிவார மூர்த்திகளை விழுந்து வணங்குவதென்றால் மற்றத் தெய்வங்களின் பக்கம் கால்கள் நீட்டப்படாதவாறு பாh;த்துக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டுதான் சில ஆலயங்களின் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் பலிபீடம், கொடிமரத்துக்கு அப்பால் மட்டும் விழுந்து வணங்குதல் போதுமானதா?
ஆம். ஆலயத்தின் பலிபீடத்தை வணங்கி, எம்மிடத்திலுள்ள அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களையெல்லாம் அங்கே பலியிட்டு தூய மனதோடு இறைவனை வணங்க வேண்டுமென்ற பாவனையாகத்தான் நாம் இந்த அட்டாங்கநமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் போன்றவற்றை செய்கின்றோம்.

உட்பிரகாரத்தைச் சுற்றிவரும் பொழுது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
சுற்றிவரும் பொழுது சந்நிதானத்தின் புறச்சுவர்களில் தலையை முட்டிவணங்குவது , சூடம் ஏற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்று வேறு எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?
நல்ல கேள்வி. நிறைய விடயங்கள் இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் எல்லாவற்றையும் சரிவரச் செய்வதென்பது முடியாதகாரியம். இருப்பினும் எம்மால் செய்யக்கூடியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களில் பரிவார மூர்த்திகளுக்குரிய சந்நிதானங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைக்கப்படுவதால் அங்கே எழுந்தருளியிருக்கின்ற விக்கிரகங்களும் வெளியே நிற்பவர்களின் கைக்கெட்டிய தூரங்களில் தான் அமைகின்றன. எவ்வளவுதான் கைக்கெட்டிய தூரத்திலிருந்தாலும் கைகளினாலே இறைவனைத் தொட்டு வணங்குவதோ அல்லது நாம் கொண்டு சென்ற மலர்களை இறைவனுக்கு நாமாகவே சாத்துவதோ செய்யத்தக்கதன்று. அத்தோடு இவ்வாறான சந்நிதானங்களினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் விபூதி மடலினுளிருந்து நாமாகவே விபூதி எடுப்பது, உத்தரணியிலிருந்து தீர்த்தம் எடுப்பது போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். (வெளியே வைக்கப்பட்டிருக்கும் விபூதிமடலையோ உத்தரணியையோ இங்கே குறிப்பிடவில்லை இதிலிருந்து விபூதியோ தீர்த்தமோ வேண்டியவற்றை பக்தர்கள் தாமாகவே எடுத்துக் கொள்ளலாம்). அடுத்து வாகனங்களின் பட்டடைகள் மீது உட்காருவது, வாகனக்கொம்புகள் (திருவாடு தண்டு) வாகனத்துடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் (சுவாமி எழுந்தருளுவதற்காக) வாகனக் கொம்புகளைக் கடந்து செல்வது, அவற்றின் மேல் உட்காருவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
அடுத்து ஆலய வழிபாட்டுடன் தொடர்பற்றதாக இருப்பினும் இங்கே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். புலம்பெயர் நாடுகளில் திருமணமண்டபங்கள் இல்லாத ஆலயங்களிலே ஆலயத்தின் உட்பிரகாரத்திலே திருமணங்கள் நடைபெறுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களிலே நாங்கள் இருப்பது ஆலயத்தினுள்ளே என்பதனை மறந்து விடக்கூடாது.

ஆலயங்களில் வீண்வார்தை பேசக்கூடாது என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
உண்மைதான் ஆலயங்களிலே ”பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க” என்று தான் கூறுவார்கள். இங்கே பிறவார்த்தை அல்லது வீண்வார்த்தை என்பது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியாக நாங்கள் பேசுவதையே வலியுறுத்தி நிற்கின்றது. எனவே நாங்கள் ஏதாவது பேசவேண்டுமென்றால் பக்கத்திலே நின்று வணங்குகின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சற்று அப்பால் சென்று மெதுவாகப் பேசிக் கொள்ளலாம். அதிலும் பூசை நடைபெறும் பொழுதும் வேதபாராயணங்கள் ஓதப்படும்பொழுதும் அமைதி காக்கப்படவேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களோ அல்லது படையல்செய்யும் பொருட்களோ எவ்வாறு கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்?
கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமா?சிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.
பார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.
விநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.
முருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.
பெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.

பூசை நேரங்களில் தீபாராதனை காண்பதற்காக ஒருவரையொருவர் முட்டிமோதி ஓடிச்சென்று வழிபாடு செய்வது சரியாகுமா?
இது சரியா அல்லது பிழையா என்பது முக்கியமல்ல. நாம் தீபாராதனை காண்பதற்காக அவசரமாகச் செல்லும்பொழுது வயதானவர்கள் மீதோ அல்லது ஒரு சுகவீனமானவர் மீதோ மோதி அவர்களின் உடலிலோ உள்ளத்திலோ வலியினை ஏற்படுத்திவிட்டு தீபாராதனை காண்பதில் பயனேதுமில்லை. இது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல பரிவார மூர்த்திகளுக்கு பூசை நடைபெறும் பொழுது சிலசமயங்களில் பக்தர்கள் முன்னே ஓடிச்சென்று சந்நிதானத்தின் வாயிலையே முற்றுகையிடுவதால் பூசை செய்யும் சிவாச்சாரியார்களே உள்ளே